Thursday, 1 October 2015

புதுகை பொய்கையை மொய்த்த புத்தக வண்டுகள்
காலம் முழுவதும் கவனிக்கப்படும் வரலாற்று முகங்கள் புதுக்கோட்டைக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் புத்தகப் பொக்கிஷமாய், நூல்களின் ஆய்வுச் சுரங்கமாய் இந்நகரம் புது அடையாளம் கண்டிருப்பது ஞானாலயா ஆய்வு நூலகத்தால்தான்.
மொழியையும், இலக்கியத்தையும், வரலாற்றையும் நவீனத் தமிழன் தொலைக்கத் துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் காலவெள்ளத்திற்கு நல்லோர் சிலர் அமைத்த கரையால் இன்னும் நம் அடையாளங்களில் சிறிதளவாவது மிச்சமிருக்கிறது. அந்தவகையில் முதலிடம் பெறுகிறார்கள்- புத்தகச் சேகரிப்பில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர்கள் பா.கிருஷ்ணமூர்த்தியும், அவருடைய வாழ்விணையர் பேரா.டோரதியும். அவர்கள் இருவரும் எழுத்தும், பேச்சும் இரண்டறக் கலந்த வாழ்வியல் கூட்டணி. வாசிப்பையும் வாழ்க்கையையும் மாறிமாறி நேசிப்பவர்கள்.
இருவரும் ஆசிரியர்களாய் வாழ்க்கையைத் துவக்கியவர்கள். தம் சொந்தச் செலவில் அறிவின் புதையல்களான புத்தகங்களை வாங்கிக் குவித்து, அரிய புத்தகங்களை எல்லாம் ஊர்ஊராய்த் தேடிச் சென்று குருவி சேர்த்த நெற்களஞ்சியமாய் இன்று இவர்களிடம் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள். ஒரு பெரிய ஆய்வுக் கடலாய் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் செய்யவேண்டியதை, ஓர் அரசாங்கம் செய்யவேண்டியதை தனிநபராய் செய்து முடித்துள்ள இந்த ஞானத்தந்தைக்கும் தாய்க்கும் 2015, ஆகஸ்ட் 15&16 இல் பவளவிழா எடுத்தனர் புதுகை மாநகரின் பண்பட்ட மனிதர்கள் சிலர்.
அநாதைப் பிணங்களுக்கு அனைத்து இறுதி மரியாதைகளும் செய்து முடித்து நல்லடக்கம் செய்துவருவதை வாழ்வியல் கொள்கையாக வைத்துள்ள புதுகை மருத்துவர் இராமதாசு தலைமையில் பவள விழாக்குழு களத்தில் இறங்கியது. தம் சொந்த வீட்டு நிகழ்வுகளுக்குகூட இந்தக் குழு உறுப்பினர்கள் இவ்வளவு உழைத்திருக்கமாட்டார்கள். இந்த வெற்றி விழாப் பின்னணியில் பவளவிழாக்குழுவினர் சிந்திய வியர்வையும் விழா சிறப்புற அமைவதற்கான நேர்த்தியும் அதிகமாகவே தென்பட்டது.
மரியாதைக்குரியவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தவறுவதும் மாபெரும் சமூகப்பிழை என்பதை உணர்ந்து அந்த இணையர் செய்த நற்காரியங்களுக்கு விழா எடுத்த குழுவினருக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்வதும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் நம் வாழ்வியல் கடமை.
அழகான குரலில் வார்த்தைகளை அடுக்கும் நம் அற்புதக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் நிகழ்ச்சி நெறியாள்கை என்றும் எங்கும் குறை கண்டதேயில்லை. இது, அவரையும் உறுப்பினராய்க் கொண்ட விழாக் குழுவினரின் சொந்த நிகழ்ச்சி... சும்மா இருப்பாரா. கவிஞர்..? மேடையில் சாட்டையில்லா பம்பரமாய் அவர்.
ஓய்வுபெற்ற தினத்தில் நீதித்துறையின் பழைய சம்பிரதாயங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சக மனிதர்களோடு மனிதனாய் பொதுப்போக்குவரத்தில் இல்லம் திரும்பிய மக்கள் நீதிபதி கே.சந்துரு, புதிய தரிசனங்களுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன், அறச்சீற்றத்தில் ஒருபோதும் குறையற்ற உணர்ச்சிக்குரலோன் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் (அவருடைய அற்புதமான சொல்லோவியத்தை ஒலிப்பதிவு செய்யத் தவறி விட்டேனே என்ற ஏக்கமும் குற்ற உணர்ச்சியும் இன்னும் என்னை விட்டு அகலவில்லை), அலையன்ஸ் பதிப்பகம் சீனிவாசன், சந்தியா பதிப்பகம் நடராஜன் , முன்னாள் நிதித்துறை செயலாளர் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ், லண்டனிலிருந்து இந்த நிகழ்வுக்காகவே சிறப்பு வருகை தந்த ஸ்ரீராம், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன முன்னாள் பொறுப்பு அலுவலர் முனைவர் இராமசாமி... இப்படி எழுத்துக்கும் புத்தகங்களுக்கும் நெருங்கிய உறவு கொண்ட நெஞ்சங்கள் மேடையை நிறைத்திருந்தனர்.
சில நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சிலரின் பேச்சு எப்போது முடியும் என்று வெறுத்துக் காத்திருப்போம்... ஆனால் இந்த நிகழ்ச்சியின் அனைத்துப் பேச்சாளர்களின் பேச்சும் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே (காலம் கருதி முடிக்கப்பட்டு விட்டதே..) என்று ஆதங்கப்பட வைத்தது. ஒவ்வொருவர் பேச்சிலும் அவ்வளவு அரிய தகவல்கள், புதுப்புதுச் செய்திகள், புத்தக உறவுகள்... நூலக வரலாறுகள் , அறிவுத்துறையைக் கண்டு கொள்ளாத அதிகாரவர்க்கத்தின் மீது நியாயமான உள்ளக்குமுறல்கள்.. இப்படி ஏராளமாய் !
இந்த நிகழ்வை காலை 10 மணிக்கே ஆரம்பித்து இரவு வரை நீட்டித்திருக்க கூடாதா? என்று விழாக்குழுவினருடன் உரிமையோடு கோபம் கொள்ளச் செய்கிறது மனசு.

ஏனெனில் கொள்வதற்கு ஆட்கள் இருந்தும் கடை விரிக்க சூழல் இல்லாமல்போன சோகம்தான்.
இந்த நிகழ்வுக்கு மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் புத்தகப் பிரியர்கள் இந்தப் பொய்கையை மொய்த்திருந்தனர். மகாகவி பாரதியின் ஒட்டுமொத்த எழுத்துகள் அனைத்தையும் “ காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் “ என்ற தலைப்பில் பதிப்பித்த பெரியவர் சீனி.விஸ்வநாதன், எனக்கு உள்பட பலருக்கும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி வகுப்பறைகளில் ‘வாசிப்பின் ருசி’ (நன்றி.. எழுத்தாளர் பொன்னீலன் ) சொல்லிக் கொடுத்து- மாதச்சம்பளத்தில் ( தற்போதைய ஓய்வூதியத்திலும்) பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்கிக் குவித்தும் – அதில் பலபடிகள் வாங்கி அதனை பலருக்கும் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கும்- புத்தக வீட்டுக்குள் வசித்துவரும் என் மானசீக பேராசிரியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன், விருதுநகரிலிருந்து கவிஞர் திலகபாமா... சென்னையிலிருந்து எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் வைகறை, பெங்களூரிலிருந்து எழுத்தாளர் மு.தருமராசன், உள்ளூர் படைப்பாளிகள் இப்படி இங்கு குவிந்த எழுத்துலக பிரமுகர்கள் ஏராளம். ஆசிரியர்கள்- பேராசிரியர்கள்- மாணவர்கள்- பெண்கள்- பொதுமக்கள் என அதிக அளவில் இந்த விழாவுக்கு வந்திருந்தது அறிவுத் தேடலுக்கான ஒரு நல்ல அறிகுறியின் ஆரம்பம்.
ஆலயம் சென்றால் அருள் கிடைக்குமா? என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த ஞானாலயம் சென்றால் கட்டாயம் அறிவு கிடைக்கும். நாம் அறிவை நோக்கி அடி எடுத்து வைப்போம்.
நன்மக்களுக்கு விழா எடுத்த நல்லோர் பெருமக்களே...! உங்களைக் கண்டு புத்தக உலகம் பொறாமை கொள்கிறது-விழா நாயகர்களை வாழ்த்தி வணங்குகிறது..

No comments:

Post a Comment