Friday 9 October 2015

ஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....

ஒரு கோழிக்குஞ்சும் சில கழுகுகளும்....
(புதுகையில் நடந்த கொடுமை)
கிழந்த உடை, பிசுக்கேறிய சடைமுடி,,,, குளிக்காத உடம்பு, முகம் சுளிக்க வைக்கும் முகத்தோற்றம் இப்படி நாடெங்கும்,ஊரெங்கும் திரியும் மனநோயாளிகளைக் கண்டால் யார் பெற்ற பிள்ளையோ...? என்ற பரிதாபத்துடன் கடந்து விடுகிறோம்.. சிலர் பயந்து விடுகிறோம்... சிலர் முடிந்ததை  கொடுத்து உதவி செய்கிறோம்..
பாவம்..அவர்கள் தன்னை மறந்தவர்கள், தன்னிலை இழந்தவர்கள்... அவர்களைக் குணப்படுத்தமுடியாமல் அவர்களின் குடும்பத்தாரே கைவிட்ட நிலையில்தான் இவர்கள் தெருவுக்கு வருகிறார்கள்.மாநிலங்கள் கடந்தும் ஏற்றுமதி செய்யப்பட்டு ஏதோ  ஒரு பகுதியில் தள்ளிவிடப்படுகிறார்கள்.
இப்படி அலைந்து திரியும் அபலைகளின் செயல்கள் சில நேரம் முகம் சுளிக்க வைக்கும். எல்லை மீறும்போது கோபம் வரவும் செய்யும். உண்மைதான். அப்படி எல்லை மீறிய மனநலம் பாதித்த ஒரு இளைஞருக்கு  புதுக்கோட்டை பேருந்து நிலையம் எதிரே நடந்த கொடுமையைக் கேளுங்கள்.
8-10-2015, வியாழக்கிழமை- நண்பகல் 1.30 மணி. புதுக்கோட்டை புதியபேருந்து நிலையம் எதிரே மனநலம் பாதிக்கப்பட்ட  25 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞனை– நல்ல உடல் தோற்றம் கொண்ட ஒருவர் மிகப்பெரிய கட்டைக் கம்பு  கொண்டு மூர்க்கமாகத் தாக்குகிறார். அந்த இளைஞன் ‘ஐயோ..அம்மா’ என அலறுகிறான். கத்துகிறான். மரணக் கூச்சலிடுகிறான். விடுவதாக இல்லை. அடிமேல் அடி தொடர்கிறது.அவன் குப்பைத் தொட்டியில் சேகரித்த உணவுப் பண்டங்கள் எல்லாம் சிதறிக் கிடக்கின்றன. அரைக்கால் சட்டையுடன், இரு கைகளையும் சேர்த்து கும்பிட்டுக் கொண்டே  சாலையில் படுத்துக் கதறுகிறான்.விளாசித்தள்ளும் கம்பின் வேகம் குறையவே இல்லை. வேடிக்கை மனிதர்களின் கூட்டம் சுற்றி நிற்கிறது.
 பேருந்து நிலையத்திலிருந்து வீட்டுக்கு  ஆட்டோவில் புறப்பட நான் ஆயத்தமானபோதுதான் இந்தக் கொடுமை என் கண்ணில்பட்டது. கோழிக்குஞ்சை கொத்திக் கொத்தி  வேட்டையாடிய அந்த ராட்சஷ கழுகின் கம்பினைப் பறித்தேன். “ஏன் இவனை இப்படிப் போட்டு  அடிக்கிறீர்கள் ? எனக் கேட்டேன். அவ்வளவுதான்...
“ வாய்யா காந்தீயவாதி.... இவன் என்ன பண்ணுனான் தெரியுமா? இவனை எல்லாம் கொல்லாம விடக்கூடாது... உன் வேலையைப் பார்த்துட்டுப் போய்யா...” எனச் சீறினார் கம்போடு தாண்டவம் ஆடிய தடியர். 
அடுத்து, வெள்ளைச் சட்டை,கறுப்பு பேண்ட்,நெற்றியில் விபூதி, சந்தனம், கண்ணாடி அணிந்த பெரிய மனிதரோ... “ உன் வீட்டில கூட்டிக்கிட்டுப் போய் வச்சுக்கய்யா... அப்பத் தெரியும்...” என சித்தாந்தம் பேசினார் அந்த சில்லறை மனிதர்.
அடுத்து ஒரு நடுத்தர வயது அம்மா, “ உங்க வீட்டுப் பொம்பளைகளுக்கு இப்படி நடந்தா நீ சும்மா இருப்பியா? “ பந்தினை என் மீது திருப்பி அடித்தது.
“அவனுக்கு என்ன தெரியும்...அவனுக்கு மொழி இல்லை... உணவில்லை...உடை இல்லை... அவன் அவனாவே இல்லை... அவன் எல்லாம் இழந்து நிக்குறான். அவன் தப்புச் செஞ்சாக்கூட அவனை அடிக்க நீங்க யாரு? உங்க வீட்டில இப்படி ஒருத்தன் இருந்தா என்ன பண்ணுவீங்க... உங்களுக்கு எல்லாம் இதயமே இல்லையா?  இந்த மண்ணுல மனிதாபிமானம் சுத்தமா செத்துப்போச்சா “ என கோபத்தில் நானும் கத்தினேன்.ஆனால் யாரும் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. என் குரல் கேட்டு சாலையில் நடந்து சென்ற சிற்சில வெகுக்குறைவான மனிதர்களும், குறிப்பாய் என் பக்கத்து வீட்டு நண்பர் திரு.சற்குணம் அவர்கள்  மட்டும் அந்தக் கொடுமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். அப்புறம்தான் அந்த இளைஞனை அவர்களிடமிருந்து காப்பாற்ற முடிந்தது.
இந்தக் கொடுமை நடக்கும் இடத்திற்கு எதிரேதான் காவல்துறை “ சார் அந்தக் காரு யாரு... மூவ் பண்ணுங்க... ஆட்டோ  இங்கே நிக்காதே கிளம்பு....” என ஒலிபெருக்கியில் கடமை செய்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்தக் காட்சி மட்டும் அங்குள்ள காக்கிகளுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.
அப்படி அவன் என்னதான் செய்துவிட்டான் ? என விசாரித்தபோது ஒரு பெண்மணியின் சேலையில் காறித் துப்பிவிட்டனாம்... அதற்குத்தான் இந்தத் தண்டனையாம்.
உங்கள் வீட்டுப் பிள்ளைகள் உங்கள் உடைகளில் அசிங்கம் செய்து விட்டால்... இப்படித்தான் நடந்து கொள்வீர்களா? சிறுவயதுப் பிள்ளைகளுக்கு கூட ஓரளவு நல்லது, கெட்டது தெரியும் இப்படி மனநலம் பாதித்த இந்தப் பாவஜீவன்களுக்கு என்ன தெரியும்? இவர்களின் செயல்பாடுகள் சமூக நலனுக்கு எதிராக இருந்தால் இவர்களைத் திருத்துவதற்கும், துரத்துவதற்கும்  இதுதான் வழியா? நாட்டில் நடக்கும் எவ்வளவோ கொடுமைகளுக்கு கண்மூடிக் கிடக்கும் மனிதா.... மனநலம் பாதித்த அப்பாவிகள்மீது நடத்தப்படும் காட்டுமிராண்டித்தாக்குதல் அணிலை கோடரி கொண்டு வெட்டிக் கூறுபோடுவதற்கு சமம்...
வாழ்க உங்கள் ரௌத்ரம்(?)..
வேதனையுடன்....
பழ.அசோக்குமார்


Thursday 1 October 2015

புதுகை பொய்கையை மொய்த்த புத்தக வண்டுகள்
காலம் முழுவதும் கவனிக்கப்படும் வரலாற்று முகங்கள் புதுக்கோட்டைக்கு நிறையவே இருக்கிறது. ஆனால் புத்தகப் பொக்கிஷமாய், நூல்களின் ஆய்வுச் சுரங்கமாய் இந்நகரம் புது அடையாளம் கண்டிருப்பது ஞானாலயா ஆய்வு நூலகத்தால்தான்.
மொழியையும், இலக்கியத்தையும், வரலாற்றையும் நவீனத் தமிழன் தொலைக்கத் துவங்கி வெகுகாலம் ஆகிவிட்டது. இருந்தும் காலவெள்ளத்திற்கு நல்லோர் சிலர் அமைத்த கரையால் இன்னும் நம் அடையாளங்களில் சிறிதளவாவது மிச்சமிருக்கிறது. அந்தவகையில் முதலிடம் பெறுகிறார்கள்- புத்தகச் சேகரிப்பில் புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலக நிறுவனர்கள் பா.கிருஷ்ணமூர்த்தியும், அவருடைய வாழ்விணையர் பேரா.டோரதியும். அவர்கள் இருவரும் எழுத்தும், பேச்சும் இரண்டறக் கலந்த வாழ்வியல் கூட்டணி. வாசிப்பையும் வாழ்க்கையையும் மாறிமாறி நேசிப்பவர்கள்.
இருவரும் ஆசிரியர்களாய் வாழ்க்கையைத் துவக்கியவர்கள். தம் சொந்தச் செலவில் அறிவின் புதையல்களான புத்தகங்களை வாங்கிக் குவித்து, அரிய புத்தகங்களை எல்லாம் ஊர்ஊராய்த் தேடிச் சென்று குருவி சேர்த்த நெற்களஞ்சியமாய் இன்று இவர்களிடம் சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான நூல்கள். ஒரு பெரிய ஆய்வுக் கடலாய் உருவாக்கி இருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் செய்யவேண்டியதை, ஓர் அரசாங்கம் செய்யவேண்டியதை தனிநபராய் செய்து முடித்துள்ள இந்த ஞானத்தந்தைக்கும் தாய்க்கும் 2015, ஆகஸ்ட் 15&16 இல் பவளவிழா எடுத்தனர் புதுகை மாநகரின் பண்பட்ட மனிதர்கள் சிலர்.
அநாதைப் பிணங்களுக்கு அனைத்து இறுதி மரியாதைகளும் செய்து முடித்து நல்லடக்கம் செய்துவருவதை வாழ்வியல் கொள்கையாக வைத்துள்ள புதுகை மருத்துவர் இராமதாசு தலைமையில் பவள விழாக்குழு களத்தில் இறங்கியது. தம் சொந்த வீட்டு நிகழ்வுகளுக்குகூட இந்தக் குழு உறுப்பினர்கள் இவ்வளவு உழைத்திருக்கமாட்டார்கள். இந்த வெற்றி விழாப் பின்னணியில் பவளவிழாக்குழுவினர் சிந்திய வியர்வையும் விழா சிறப்புற அமைவதற்கான நேர்த்தியும் அதிகமாகவே தென்பட்டது.
மரியாதைக்குரியவர்களுக்கு உரிய மரியாதை செய்யத் தவறுவதும் மாபெரும் சமூகப்பிழை என்பதை உணர்ந்து அந்த இணையர் செய்த நற்காரியங்களுக்கு விழா எடுத்த குழுவினருக்கு ஒவ்வொரு தமிழனும் நன்றி சொல்வதும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதும் நம் வாழ்வியல் கடமை.
அழகான குரலில் வார்த்தைகளை அடுக்கும் நம் அற்புதக் கவிஞர் தங்கம் மூர்த்தி அவர்களின் நிகழ்ச்சி நெறியாள்கை என்றும் எங்கும் குறை கண்டதேயில்லை. இது, அவரையும் உறுப்பினராய்க் கொண்ட விழாக் குழுவினரின் சொந்த நிகழ்ச்சி... சும்மா இருப்பாரா. கவிஞர்..? மேடையில் சாட்டையில்லா பம்பரமாய் அவர்.
ஓய்வுபெற்ற தினத்தில் நீதித்துறையின் பழைய சம்பிரதாயங்களை எல்லாம் தூக்கி எறிந்துவிட்டு சக மனிதர்களோடு மனிதனாய் பொதுப்போக்குவரத்தில் இல்லம் திரும்பிய மக்கள் நீதிபதி கே.சந்துரு, புதிய தரிசனங்களுக்காக சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பொன்னீலன், அறச்சீற்றத்தில் ஒருபோதும் குறையற்ற உணர்ச்சிக்குரலோன் தோழர் பாரதி கிருஷ்ணகுமார் (அவருடைய அற்புதமான சொல்லோவியத்தை ஒலிப்பதிவு செய்யத் தவறி விட்டேனே என்ற ஏக்கமும் குற்ற உணர்ச்சியும் இன்னும் என்னை விட்டு அகலவில்லை), அலையன்ஸ் பதிப்பகம் சீனிவாசன், சந்தியா பதிப்பகம் நடராஜன் , முன்னாள் நிதித்துறை செயலாளர் சுவாமிநாதன் ஐ.ஏ.எஸ், லண்டனிலிருந்து இந்த நிகழ்வுக்காகவே சிறப்பு வருகை தந்த ஸ்ரீராம், மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன முன்னாள் பொறுப்பு அலுவலர் முனைவர் இராமசாமி... இப்படி எழுத்துக்கும் புத்தகங்களுக்கும் நெருங்கிய உறவு கொண்ட நெஞ்சங்கள் மேடையை நிறைத்திருந்தனர்.
சில நிகழ்ச்சிகளுக்கு சென்றால் சிலரின் பேச்சு எப்போது முடியும் என்று வெறுத்துக் காத்திருப்போம்... ஆனால் இந்த நிகழ்ச்சியின் அனைத்துப் பேச்சாளர்களின் பேச்சும் இவ்வளவு சீக்கிரத்தில் முடிந்து விட்டதே (காலம் கருதி முடிக்கப்பட்டு விட்டதே..) என்று ஆதங்கப்பட வைத்தது. ஒவ்வொருவர் பேச்சிலும் அவ்வளவு அரிய தகவல்கள், புதுப்புதுச் செய்திகள், புத்தக உறவுகள்... நூலக வரலாறுகள் , அறிவுத்துறையைக் கண்டு கொள்ளாத அதிகாரவர்க்கத்தின் மீது நியாயமான உள்ளக்குமுறல்கள்.. இப்படி ஏராளமாய் !
இந்த நிகழ்வை காலை 10 மணிக்கே ஆரம்பித்து இரவு வரை நீட்டித்திருக்க கூடாதா? என்று விழாக்குழுவினருடன் உரிமையோடு கோபம் கொள்ளச் செய்கிறது மனசு.

ஏனெனில் கொள்வதற்கு ஆட்கள் இருந்தும் கடை விரிக்க சூழல் இல்லாமல்போன சோகம்தான்.
இந்த நிகழ்வுக்கு மாநிலத்தின் பலபகுதிகளிலிருந்தும் புத்தகப் பிரியர்கள் இந்தப் பொய்கையை மொய்த்திருந்தனர். மகாகவி பாரதியின் ஒட்டுமொத்த எழுத்துகள் அனைத்தையும் “ காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் “ என்ற தலைப்பில் பதிப்பித்த பெரியவர் சீனி.விஸ்வநாதன், எனக்கு உள்பட பலருக்கும் தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி வகுப்பறைகளில் ‘வாசிப்பின் ருசி’ (நன்றி.. எழுத்தாளர் பொன்னீலன் ) சொல்லிக் கொடுத்து- மாதச்சம்பளத்தில் ( தற்போதைய ஓய்வூதியத்திலும்) பெரும்பகுதியை புத்தகங்கள் வாங்கிக் குவித்தும் – அதில் பலபடிகள் வாங்கி அதனை பலருக்கும் இன்னும் கொடுத்துக் கொண்டிருக்கும்- புத்தக வீட்டுக்குள் வசித்துவரும் என் மானசீக பேராசிரியர் முனைவர் மு.பழனி இராகுலதாசன், விருதுநகரிலிருந்து கவிஞர் திலகபாமா... சென்னையிலிருந்து எழுத்தாளர் மற்றும் பதிப்பாளர் வைகறை, பெங்களூரிலிருந்து எழுத்தாளர் மு.தருமராசன், உள்ளூர் படைப்பாளிகள் இப்படி இங்கு குவிந்த எழுத்துலக பிரமுகர்கள் ஏராளம். ஆசிரியர்கள்- பேராசிரியர்கள்- மாணவர்கள்- பெண்கள்- பொதுமக்கள் என அதிக அளவில் இந்த விழாவுக்கு வந்திருந்தது அறிவுத் தேடலுக்கான ஒரு நல்ல அறிகுறியின் ஆரம்பம்.
ஆலயம் சென்றால் அருள் கிடைக்குமா? என்பதில் எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த ஞானாலயம் சென்றால் கட்டாயம் அறிவு கிடைக்கும். நாம் அறிவை நோக்கி அடி எடுத்து வைப்போம்.
நன்மக்களுக்கு விழா எடுத்த நல்லோர் பெருமக்களே...! உங்களைக் கண்டு புத்தக உலகம் பொறாமை கொள்கிறது-விழா நாயகர்களை வாழ்த்தி வணங்குகிறது..
புது முயற்சியில் புதுக்கோட்டை நகராட்சி
பூமி எதிர்நோக்கி இருக்கும் மிகப்பெரிய அபாயத்திலிருந்து மரங்களால் மட்டுமே காப்பாற்ற முடியும். கவிக்கோ அப்துல்ரகுமானின் வார்த்தைகளில் சொல்வதென்றால் ‘மரங்கள் இந்த மண்ணின் வரங்கள்’ . மரங்களின்றி வாழ்வு ஏது?ஆளுக்கொரு மரம் வளர்த்தாலே போதும் இந்தப் பூமியைக் காப்பாற்றி விடமுடியும். மகத்துவமிக்க மரங்களின் அவசியம் உணர்ந்து தமிழக அரசின் ஏற்பாட்டில் புதுகை நகராட்சி ஒரு நல்ல காரியத்தில் களமிறங்கி இருக்கிறது.
மரக்கன்றுகளை வளர்த்து பொதுமக்களுக்கு மிகக்குறைந்த விலையில் விற்பதற்காக புதுக்கோட்டை புல்பண்ணையில் 10 சென்ட் அளவில் நர்சரி பண்ணையை உருவாக்கி வருகிறது. மாநில அளவில் கொண்டு செல்லப்படும் இத்திட்டத்திற்கான மாதிரிக்களமாக புதுக்கோட்டை நகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இங்கு தேக்கு,நாவல்,வேம்பு போன்ற 7 வகையான அடர் நிழல் தரும் மரக்கன்றுகளை இந்தப் பண்ணைகளில் வளர்த்து விற்பனை செய்ய உள்ளனர். நகராட்சியிலிருந்து சேகரிக்கப்படும் குப்பைகளை மக்கவைத்து அதிலிருந்து உருவாக்கப்படும் இயற்கை உரத்தால் இந்தக் கன்றுகள் வளர்க்கப்பட்டுவருகின்றன. பொதுமக்களின் தேவை கருதி மரக்கன்றுகளின் ரகங்கள் இன்னும் அதிகரிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..
ஒரு மரக்கன்றின் விலை ரூ. 3/ (மூன்று) மட்டுமே என்று சொல்லி இருக்கிறார் புதுக்கோட்டை நகர்மன்றத் தலைவர் ராஜசேகர். இந்த மாத ( செப்டம்பர்) இறுதியிலிருந்து விற்பனை தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 5,750 மரக்கன்றுகள் இந்தப் பண்ணையில் இருக்கிறதாம். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து இதர மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்படுமாம்.
இது தொடர்பான நல்ல செய்தியை வெளியிட்ட (14-092015) THE HINDU – ஆங்கில நாளிதழுக்கு. ( திருச்சி பதிப்பு ) நன்றி.

Tuesday 29 September 2015

முகவரியற்ற முகங்கள் எதற்கு?

முகவரியற்ற முகங்கள் எதற்கு?

ஆடை குறைப்பாய்
ஆங்கிலம் மட்டும் ஏற்பாய்
தமிழ் பெயரும்  தாய்தந்தையும்
தகுதிக்குறைவென்பாய்...

ஆணும் பெண்ணும்
சரிநிகர் என்பதில்
சற்றும் குறைவில்லை
அது ..
குடித்தலுக்கும்
புகைத்தலுக்கும்
மட்டுமே இல்லை மக்களே ...

கண்ணியம் மீறா  பெண்ணியமும்
வன்முறை தீண்டா  வாலிபமும்
பெற்றோருக்கு
நீ செய்யும்  பெரும் மரியாதை!

விஞ்ஞானத்தோடு விளையாடு
செவ்வாய்க் கிரகத்துக்கு சிறகடி
கணினியோடு கை குலுக்கு
அரசியலில் பங்கு கொள்
அதிகாரம் கைப்பற்று
அனைத்திலும் முன்னே செல்
இன்னும்  இன்னும்  மேலே போ ...

ஆனால்
 ஒன்று மட்டும் புரிந்து கொள் ...
வேர்களை வெட்டி எறிந்து விட்டு
பூக்களை நுகராதே !

பண்பாட்டின் மறுபெயர்
பழமை என்று விளக்கம்  தரலாம்
உன் டிஜிட்டல் உலகம்....

மொழியும் இனமும்
உன் முகவரி தோழா  !

முகவரியற்ற முகங்கள் எதற்கு?
முத்துகளற்ற சிப்பிகள் எதற்கு?
                 
                             - பழ.அசோக்குமார் , புதுகை

(வலைப்பதிவர் திருவிழா - 2015 மற்றும் தமிழ் இணையக் கல்விக்கழகம் நடத்தும் மின் தமிழ் இலக்கியப் போட்டிகள் 2015 க்காவே 'முகவரியற்ற முகங்கள் எதற்கு?' எனும்  தலைப்பில் எழுதப்பட்டுள்ள இக்கவிதை எனது சொந்தப்படைப்பே என உறுதி அளிக்கிறேன்.


இதற்கு முன் எங்கும் வெளியிடப்படவில்லை! இது  என்னுடைய முழு  கற்பனை ஆக்கமே! போட்டி முடிவுகள் வெளிவரும் வரை வேறெதிலும் வெளியிடமாட்டேன் என்று உறுதி கூறுகின்றேன்! போட்டியின் அனைத்து விதிமுறைகளுக்கும் கட்டுப்படுகிறேன். 


- பழ.அசோக்குமார் , புதுக்கோட்டை.)